உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரே நாணய முறை என்று கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது?
உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஒரே பொருளாதார நிலையில் இல்லை. ஏழை நாடுகளின் நாணயம் பணக்கார நாடுகளின் நாணயங்களைவிட மலிவாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக இன்றைக்கு ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயில் 74.3..
இந்தியாவின் ஏற்றுமதி வாணிகத்தில் பெரும் பங்கு வகிப்பது துணி மற்றும் ஆடை ஏற்றுமதி. குறிப்பிட்ட டி-ஷர்ட் விலை 150 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அமெரிக்க டாலருக்கு 74.3 இந்திய மதிப்பு என்பதால் அமெரிக்க நாணயக் கணக்கில் இந்திய ஆடை விலை வெறும் இரண்டு அமெரிக்க டாலர்தான். எனவே அமெரிக்க வியாபாரிகள் இந்திய டி-ஷைர்ட்டை வாங்கி அமெரிக்காவில் விற்க முன் வருவார்கள்.
ஏன் இந்திய நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது? மத்திய அரசு இந்திய நாணயத்தை அச்சடித்து கூடுதலாக வெளியிடுவதால், பணப் புழக்கம் அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் குறைந்து விடுகிறது. பண மதிப்பிழப்பு ஏற்படுகிறது. ஓராண்டில் மிகக் கூடுதல் அளவில் தக்காளி விளைந்தால், விலை அடி மட்டத்துக்குக் குறைந்துவிடும். அதேபோல விளைச்சல் குறைந்தால், தக்காளி விலை ஏறிவிடுகிறது. அதேபோலத்தான் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு கூடினால் அதன் மதிப்பு குறைந்துவிடும்.
பண மதிப்பு குறைந்தால் ஏற்றுமதிக்கு சாதகம். பண மதிப்பு கூடினால், இறக்குமதிக்கு சாதகம். எனவே இரண்டையும் சமன் செய்யும் விதத்தில் ஓர் அரசு பணப் புழக்கக் கொள்கையை வகுக்கும் . ஒவ்வொரு நாட்டின் அரசும் இறக்குமதி ஏற்றுமதி நிலவரங்களைக் கவனித்து பணப் புழக்கத்தை சரி செய்யும். உலகம் முழுவதும் ஒரே நாணயம் என்றால் அது சாத்தியமில்லை.
****************************