எடை குறைப்பு –சில உண்மைகள்:
உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் உடல் மற்றும் மனநலன் மேம்படும். தன்னம்பிக்க்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் எடை கூடுமா?- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான தேவையாகும். காலை உணவைத் தவிர்ப்பவர்கள் ஆற்றல் தேவைக்காக அந்த நாள் முழுவதும் அதிகமாக சாப்பிடுவார்கள். பலரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எடையும் இடுப்புச் சுற்றளவும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதற்கு, அனைத்து சத்துக்களும் அடங்கிய காலை உணவு முக்கியமானது.
கொழுப்பைக் கரைக்கும் உணவுகள் உடல் எடையைக் குறைக்குமா?- அன்னாசிப் பழம், இஞ்சி, வெங்காயம், மிளகாய், க்ரீன் டீ மற்றும் பூண்டு போன்ற உணவுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகின்றன. அதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கலோரிகளாக மாற்றப்பட்டு எரிக்கப்படும். இதன் மூலம் உடல் எடை குறையும்.
எடையைக் குறைப்பதற்காக சாப்பிடும் செயற்கை உணவுப் பொருட்கள் ( சப்ளிமென்டுகள்) பலன் தருமா?- சத்துள்ள உணவு, முறையான உடற்பயிற்சி, தேவையான இரவுத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் மட்டுமே, ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க முடியும். பெரும்பாலான சப்ளிமென்டுகளில் உள்ள மூலப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
குறைந்த கொழுப்புள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்குமா?- குறைந்த கொழுப்பு அளவு கொண்ட இயற்கை உணவுகள் உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. கொழுப்பு குறைக்கப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் உப்பு எடை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும்.
நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா?- எண்ணெய், கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் பொறித்த மற்றும் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் எடையை முறையாக பராமரிப்பதற்கு உதவும். கடலை உருண்டை, எள் உருண்டை, சுண்டல் காய்கறி மற்றும் பழங்கள் கலந்த சாலட் மற்றும் சாலட், விதைகள், கொட்டைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
விருந்து உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா?- விருந்துகளில் பங்கேற்கும்போது அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடலாம். மொத்தமாக விருந்துகளைத் தவிர்க்கும்போது அந்த ஏமாற்றமே மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அன்றைய நாளில் அதிகமாக சாப்பிடுவதற்கு தூண்டிவிடும். இதன் வழியாக எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
எடையைக் குறைப்பதற்கு சர்க்கரையைத் தவிர்க்க வேண்டுமா?- எடை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரையை முழுவதுமாக தவிர்க்க வேண்டியதில்லை. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம். இனிப்புச் சுவை கொண்ட இயற்கை உணவுகளை போதுமான அளவு சாப்பிடலாம்.
******************************
Dec 262021