ஒற்றைச் சிறுநீரகத்துடன் மனிதன் எவ்வளவு நாள் வாழ முடியும்?
பிறவிக் கோளாறு காரணமாக , சிலர் ஒற்றைச் சிறுநீரகத்துடன் பிறக்கிறார்கள். தங்களுக்கு ஒரு சிறுநீரகம்தான் இருக்கிறது என்பதை அவர்களாலேயே உணர முடியாது. எக்ஸ்ரே போன்ற ஆய்வில் மட்டுமே இது தெரிய வரும். எனவே ஒற்றைச் சிறுநீரகத்துடன் சற்றேறக் குறைய இயல்பாக தம்மால் வாழ முடியும். சிறுநீரக தானம் செய்தும் பலர் இயல்பாக வாழ்கிறார்கள். இரண்டில் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து வேறு ஒருவருக்குப் பொருத்தும்போது மீதமுள்ள ஒரு சிறுநீரகம் சில மாதங்களில் உருவில் பெரிதாகி இரண்டு சிறுநீரகம் செய்த வேலையைத் தானே செய்யும்.
குளித்த பிறகு விரல்களில் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
கெராடினோசைட்டுகள் (Keratiocytes)குறிப்பிட்ட வகை செல்களால், மேல்தோல் அல்லது தோலில் வெளிப்புற அடுக்கு உருவாகியுள்ளது. கெராடின் என்ற புரதம் இந்தவகை செல்களின் சுவர்களில் செறிவாக உள்ளது. எனவே இந்தச் செல்களின் சுவர்கள் மேலும் உறுதி கொண்டவையாக உள்ளன.
மேல்தோலின் அடிப் பகுதியில் இந்தச் செல்கள் பல்கிப் பெருகி தள்ளுமுள்ளு செய்து மேல்நோக்கி எழும்புகின்றன. மேல்நோக்கிய பயணத்தில் பாதி தொலைவை அடைந்ததும் இந்தச் செல்கள் தானாகவே மடிந்து விடுகின்றன. செல்களின் உள்ளே இருந்த திரவப் பொருட்கள் விலகி ஓடு போன்ற செல்சுவர் மட்டும் மேல்நோக்கி நகர்கிறது.
செல்சுவரின் மேல் அடுக்கு லிப்பிட் (lipid) என்னும் கொழுப்புப் பொருளால் ஆனது. இது நீரை விலக்கும் தன்மை கொண்டது. ஆனால் உட்பகுதி நீரை விரும்பும் கெராடினால் ஆனது. ஸ்ட்ராட்டம்கார்னியம் (stratum corneum) என்று அழைக்கப்படுகிற தோலின் வெளிப்புறப் பகுதி லிபிட் மற்றும் கெராடின் அடுக்குகளால் ஆனது.
கை போன்ற உடல் பகுதிகள் நீரில் கூடுதல் நேரம் நனைந்தபடி இருக்கும்போது கெராடின் நீரை உறிஞ்சிப் பெருக்கம் அடைகிறது. கை கால் விரல்களில் கூடுதல் மேல்தோல் உள்ளதால், இந்தப் பகுதியில் கூடுதல் நீர் சேர்ந்து தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. நகம், முடி போன்றவற்றிலும் கெராடின் செறிவு கூடுதல். எனவேதான், ஈரமாக்கிய பின்னர் நகம் முடியை எளிதில் வெட்ட முடிகிறது.
******************