குடித்தல்- அருந்துதல் என்ன வேறுபாடு?
நம் உடல் இயங்குவதற்கான ஆற்றல் நாம் உண்ணும் உண்வவிலிருந்துதான் கிடைக்கிறது. வேளா வேளைக்கு உணவு எடுத்துக்கொண்டால்தான் நம்மால் இயல்பாக இயங்க முடியும். இல்லையேல் பசியால் சோர்ந்துவிடுவோம்.
உயிர்களின் இயற்கையான தேவை உணவு. பறவைகளும் விலங்குகளும் உணவு தேடுவதையே தொழிலாகக் கொண்டவை. ஒரு சாண் வயிற்றுக்காக என்று மனிதர்களும் உணவு தேடொய் வாழ்பவர்கள்தான். உண்ணத் தகுந்த பொருள்களிய உடலோடு சேர்த்துக்கொள்ளும் செய்கைக்குத் தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளுடையது. உண் என்கிற சொல்லில் இருந்துதான் உணவு என்ற சொல் வருகிறது.
ஒரு உணவை வயிறு நிறையும்படி எடுத்துக் கொள்வதுதான் உண்ணுதல். மேற்கு மாவட்டங்களில் சோறு உண்கிறாயா? என்றுதான் இன்னும் வினவுகின்றனர்.
தின்னுதல் என்பது விரும்பி உட்கொள்வது. தின்னுதல் என்ற சொல்லில் இருந்துதான் தீனி என்ற சொல் வருகிறது.
உணவும் தீனியும் எளிதாகவும் இருக்கலாம். ஆனால் சாப்பாடு என்பது தடபுடலாக இருக்கவேண்டும். கூப்பிடு கூப்பாடு ஆவதுபோல சாப்பிடு சாப்பாடு ஆகும். பலவகை உணவோடு, மிகுதியாகவும், பெரு விருந்தாகவும் உண்ணுவது ‘சாப்பிடுவது’ ஆகும். விருந்திட அழைப்பதால்தான் ‘சாப்பிட வாங்க’ என்கிறோம்.
உடல் நலத்திற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம். அது உண்ணுவதா? தின்பதா? சாப்பிடுவதா? அதை விழுங்குதல் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் பல்லுக்கோ, நாவிற்கோ வேலையில்லாமல் நேரடியாக விழுங்குகிறோம்.
கடித்தல், சுவைத்தல், மெல்லுதல், அசைத்தல், அசைபோடுதல், ஆகிய யாவும் உண்ணுவதோடு தொடர்புடைய சொற்கள். நீர்த் தன்மையுடைய பொருட்களுக்கு தனித்த சொற்கள் இருக்கின்றன.
மிகுதியான நீர்ப் பொருளை ஒரேயடியாகவோ விட்டுவிட்டோ எடுத்துக்கொள்வது குடித்தல் ஆகும். கஞ்சி குடிக்கிறோம். நீர்ப் பொருளை வாயில் நிறைக்காமல், சிறிது சிறிதாக சுவைத்து உட்கொள்வது பருகுதல் எனப்படும். பழச் சாறு பருகுகிறோம். அதனினும் சிறிய அளவாகஉட்கொள்வது அருந்துதல் ஆகும்.
மாந்தல், உறிஞ்சுதல் போன்ற சொற்களும் நீர்த் தன்மையுடைய பொருளை உடலோடு சேர்த்துக்கொள்வது குறித்தவையே.
*******************************
Jan 212022