குருப் பெயர்ச்சி நவம்பர் 2021-22- விருச்சிக ராசி:
விருச்சிக ராசி:
இந்த வருடம் நவம்பர் மாதம் 21-ம் தேதியன்று குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு உங்கள் சுகஸ்தானத்தில் பிரவேசிக்கிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் பிறவி ஜாதகப்படியும் அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள் .:
சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். தனகாரகனான குரு சாதகமாக சஞ்சரிக்காததால் ,பணத்தை முன்னிட்ட குறைகள் எந்த விதத்திலாவது தலைகாட்டும். வருமானம் அளவாகத்தான் வரும். நிறையவே வந்தாலும் அது ஏராளமான செலவினங்களால் உடனுக்குடன் கரைந்துபோய்விடும். கொடுக்கல்-வாங்கலும் சரியாக இருக்காது. உங்களுக்கு வரவேண்டிய பணம் வெளியில் தேங்கியிருக்கலாம். சமயத்துக்கு கைக்கு வராது. அப்படியே வந்தாலும் அரையும் குறையுமாக வந்து , குடும்பத்தில் ஏற்படும் தேவைகளுக்கு கிடைக்காமல் போகும். ஏற்கெனவே நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியும் முதலுமாகப் போய்ச் சேர்ந்துவிடும். அல்லது வீட்டுத் தேவைக்காகவும் வசதிக்காகவும் ஏற்கெனவே வாங்கிய பொருட்களுக்கு தவணைத் தொகையாக செலுத்தப்படலாம். இப்படி அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று கொடுத்துவிட்டு அவசியத் தேவைகளுக்கே சில சமயம் ஆலாய்ப் பறக்கவேண்டி வந்துவிடும். குடும்பத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் குறைபாடுகளும் குளறுபடிகளும் குறுக்கிடலாம். அடக்கமாக இருந்த கடன் பிரச்சினைகள் கிளப்பி விட்டதைப் போல தீவிரமாகிப் போய் தூங்க விடாமல் செய்யும். வாங்கின கடனைத் திருப்பித்தர இயலாமல் நாணயம் கெட்டுப்போகும். உங்கள் பணம் முதலீடாகவோ சேமிப்பாகவோ இருந்தாலும் கூட அது சமயத்தில் கிடைக்காமல் சஞ்சலப்படுத்தும். பிறருடன் சம்பந்தப்பட்ட பணப் பிரச்சினைகளில் தவறுதலாக உங்கள் நேர்மை சந்தேகிக்கப்படலாம். மற்றவர்களுடைய பணவிவகாரங்களில் தலையிட்டு வீண்விவகாரங்களை விலைக்கு வாங்கும்படி நேரலாம். நான்காம் இடத்து குருவின் அலைக்கழிப்பு இப்படியெல்லாம் இருக்கும். இதைப் படித்து நீங்கள் அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டதால், சர்வ ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள்.
தனகாரகனாக மட்டுமில்லாது, குரு பொன்காரகானாகவும் இருப்பதால், அவருடைய நான்காமிட வாஸம், உங்களுக்குப் பொன்னாபரணங்களையும் சேரவிடாது. சிலர் நகைகளை அடகுவைத்து பணம் புரட்ட நேரும். சிலர் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று நகைகளை விற்றுப் பணம் வாங்கி கடனை அடைக்க் முற்படுவர். வீடு, வாகனம்,சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் விருத்தியில்லாமல் , விவகாரமே மேலோங்கி நிற்கும். சொத்துக்களை விற்கும்போதும் வாங்கும்போதும் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் செயல்படவும்.
உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
இப்போது உங்களுக்கு குருபலம் இல்லையென்பதால், திருமண விஷயங்கள் தள்ளிப்போகும். ஆனால் ஜென்ம ஜாதகத்தின்படி திருமணத்திற்கான தசாபுத்திக்காலம் சிறப்பாக அமைந்துவிட்டால், திருமணம் முடியலாம்.ஆனால் பணம் புரட்ட முடியாமல் போவதால், பலவித சங்கடங்கள் உருவாகலாம். கணவன்- மனைவிக்கிடையில் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தைப்பேறு தாமதமாகும்.
சிலருக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளை முன்னிட்ட பொறுப்புகளும் செலவுகளும் தீவிரமாகி சஞ்சலப்படுத்தலாம். வாரிசுகளுடைய கவனக்குறைவு, அலட்சியப்போக்கமுரட்டுக்குணம் , வேண்டாத சகவாசம் ஆகியவையும் உங்களை வாட்டும். பிள்ளைகளின் முன்னேற்றங்களில் ஏற்படும் முட்டுக்கட்டைகள், சுபகாரியங்களுக்கான தடங்கல்கள் வேலைவாய்ப்புகளுக்காக அல்லாடுதல் போன்றவையும் உங்களை வாட்டி வேதனைப்படுத்தும். சிலபேர் முழு நேரத்தையும் பிள்ளைகளுடன் பிரச்சினை பண்ணுவதிலேயே கழிப்பீர்கள். நன்றாக சம்பாதிக்கிற பிள்ளைகள் நம்மைக் கவனிக்கவில்லையே என்கிற குறையும் உங்களை உறுத்திக்கொண்டிருக்கும். புத்திரகாரகனான குருவின் சாதகமற்ற நிலை இப்படியெல்லாம் படுத்தும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடனே கிடைக்கவேண்டிய சலுகைகள் தள்ளிப்போகும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும்.
பெண்களுக்கும் பொறுப்புகள் அதிகமாகி அலைக்கழிக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உங்களை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சச்சரவுதான் வரும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
குருவின் வக்கிர சஞ்சாரம்:
வக்கிர நிலையில் இருந்தபடி, உங்களுக்கு பாதகத்தை ஏறப்டுத்துவார். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வராது. சகோதர சகோதரிகளின் உறவு பாதிக்கப்படும். பிள்ளைகளிடையேயும், உறவினர்களிடையேயும் நல்லுறவு இருக்காது. உங்கள் நிலையை சரிவர புரிந்துகொண்டு நடக்கத் தவறுவதால், தொல்லைகள் வரும்.
பரிகாரம்;
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலை சாத்தி வழிபடவும். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^