Nov 022021
 

குருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2021-22 ரிஷப ராசி

ரிஷப ராசி:

வருகிற நவம்பர் மாதம் 21-ம் தேதி ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். நீங்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதன் காரணமாக தேவைக்கான வருமானம் இருக்கும். கடுமையாக முயற்சி செய்து உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பல சிரமங்கள் இருந்தாலும், அந்த சிரமங்களையெல்லாம் தாண்டி, உங்கள் வரவு செலவுகளை மிகவும் சிறப்பாகவும் சீராகவும் கொண்டுசெல்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து நிறைவேற்றுவதால், குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளை சமாளித்து அமைதியான சூழ்நிலையைக் கொண்டு வருவீர்கள்.
யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் பணம் கைக்கு திரும்ப வராது. சிலர் புதிய ஆடைகளை வாங்குவார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைக்க நேரலாம். தந்தை மேன்மை அடைவார்.
எதிலும் உங்களுடைய உழைப்பையும் அதற்கான பலன்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய ஆடைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாருடனும் விரோத மனப்பான்மையுடன் இருக்கவேண்டாம். பிறரை அனுசரித்து கவனத்துடன் நடந்துகொண்டால், தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு கடன் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் ஏதோ ஒரு கவலையும் துக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம். குரு பகவான் பத்தில் நடமாடுவதால் ஆரோக்கியம் பெருமளவு பாதிப்படையக்கூடும். நோய் நொடிகள் அடிக்கடி வந்து சொந்தம் கொண்டாடும். உடல் பலவீனம், ஈரல் கோளாறுகள், செரிமானக் குறைவு, கொலாஸ்ற்றல் பிரச்சினைகள், சர்க்கரை வியாதி போன்றவையெல்லாம் பத்தாமிட குருவால் வரும் சோதனைகள். ஊக்கமாகவோ, தெம்பாகவோ இருக்க முடியாமல், சோர்ந்து போய் படுத்துக்கொண்டு ஏதாவதொரு நோயின் பெயரைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நடை தளர்ந்து தள்ளாடுவது போலாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி மிகுந்து போய் உங்களை நீக்கிவிடலாமா என்று யோசிப்பார்கள். மேலிடத்துக்கு புகார் அனுப்புவார்கள். அவர்களும் காத்திருந்ததுபோல், உடனடியாக நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள்.
உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
ராகு கேது சஞ்சாரங்களின் மூலம் மனதில் செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.
இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. வேலைப்பளு கூடும். விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். நீங்கள் வகித்து வந்த முக்கிய பொறுப்பிலிருந்து கழற்றி விடுவார்கள்.
சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அவர்கள் கல்வியில் கவனத்தைச் சிதற விட்டு தேர்ச்சி பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். வேலை வாய்ப்பு மற்றும் திருமண சுப கார்யங்கள் என்று எதிலும் அக்கரை இல்லாமலும் தோல்வியைத் தழுவியும் அல்லாடுவர். அவர்களை கடைதேற்ற முடியாமல் நீங்கள் பெரும் அவஸ்திக்கு உள்ளாவீர்கள்.
பத்தாமிட குரு குருபலம் தரமாட்டார். எனவே ,திருமண வாழ்விலும் நற்பலன் தர மாட்டார். திருமணம் நிச்சயமாகாது. நிச்சயமான திருமணமான நின்று போகும். ஏற்கெனவே திருமணமான தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப அமைதியை இழப்பர். சிலர் கோர்ட்டுப்படி ஏறுவதுகூட நடக்கலாம். அவரவர் திசா-புத்திப் பலன்களின்படியே அவர்களுக்கு விவாகரத்து ஆவதும் சாதாரணமாகப் பிரிந்திருப்பதும் நிகழும். பொறுமை காப்பதின் மூலம் எல்லை வரை போகாமல் தற்காத்துக் கொள்ளலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் உள்ள குழப்பங்களை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இள்ளையேல் சில விபத்துகள் கூட ஏற்படலாம
குருபகவானின் சுபப் பார்வை பலன்கள்:
செப்டம்பர் மாதம் 11-ம் தேதி உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்துக்குச் செல்லும் குரு பகவானுடைய மூன்று சுபப் பார்வைகளுள் ஒரு பார்வை ‘பகை- ரோக -கடன்’ ஸ்தானத்தின் மீது பதிகிறது. இதனால் கடன் வாங்கிச் சில அவசியமான கடமைகளைச் செய்யும்படியாகும். அத்தோடு கடன் பிரச்சினைகள் கஷ்டம் கொடுக்காதபடி சமாளித்துக்கொள்ளவும்முடியும். எதிர்ப்புகளைத் தாக்குப்பிடிக்கவும் விவகாரங்களிலிருந்து தப்பிக்கவும் நோய் நொடிகளிலிருந்து குணப்படுத்திக்கொள்ளவும்கூடஇந்தக் குரு பார்வை ஒத்துழைக்கும். குரு பகவானின் மற்றொரு பார்வை ‘தன- குடும்ப-வாக்கு’ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் குடும்பத்திற்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைத்துவிடும். குடும்பம் தொல்லையின்றி ஓடிக்கொண்டிருக்கும். பேச்சுவார்த்தைகளையும் சாதுரியமாகப் பேசி நிலைமையைச் சமாளித்துக்கொண்டு வரலாம். குரு பகவானின் மற்றொரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது. அதனால் கல்வி விருத்தி உண்டு; வீட்டுக்குத் தேவையான சௌகரிய உபகரணங்கள் சேரும். வீட்டு வசதி எப்படியாவது அபிவிருத்தி அடைந்துகொண்டிருக்கும். சிலர் கடன் வாங்கியாவது வீடு கட்டவோ, வீட்டை புதுப்பிக்கவோ செய்வார்கள்.சில வசதிகளையும் செய்வார்கள். தாயார் அல்லது உறவிர்கள் நண்பர்களுடைய ஒத்தாசை கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளும் சந்திப்புகளும் பழக்க வழக்கங்களும் அனுகூலமாகும்.
குருவின் வக்கிர சஞ்சாரம்:

குருவின் 9-மிட வக்கிர நிலையால், உங்கள் கௌரவம் மேலோங்கும். ஆனால் சுயநலமாக இருக்கவேண்டாம். மதச் சார்பான விஷயங்களில் யாரையும் புண்படுத்த வேண்டாம். அது பெருந்தொல்லையை உண்டாக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு மஞ்சள் மலர் சாத்தி வழிபட்டால், துன்பம் விலகும். சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும்.
########################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)