Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன் சுபகிருது வருஷம் 2022-2023 :

கன்னி ராசி:


இந்த சுபகிருது வருஷம் உங்களுக்கு நல்ல ஜயம் தரும் வருஷமாகவே அமையும்.  குரு 7-ல் சஞ்சரித்து பலப்பல யோகங்களை வழங்குவார். சனி பகவானின் 5-மிட சஞ்சாரம் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த மாதம் நிகழ்ந்துள்ள ராகு-கேது பெயர்ச்சியும் நன்மை தர மாட்டார்கள். ஆனால்,குருப் பெயர்ச்சியால் அனைத்து வித தொல்லைகளும் நீங்கும்.
குரு பகவானின் அருளால், பற்பல யோகங்களை வழங்கப்போகும் ஆண்டாகவே இந்த வருடம் இருக்கப்போகிறது.  குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.

குருவின் 6-மிட சஞ்சாரத்தால் இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். மீனத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய ராசியையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
குருவின் 7-மிடத்து சஞ்சாரம் உங்களுக்கு சகல சம்பத்தையும் அளிக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். புதிதாக வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.
தற்போது நிகழ்ந்துள்ள ராகு-கேது பெயர்ச்சி நற்பலன்களை வழங்காது. ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இவற்றை நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.
8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்களையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். வீடு குடி மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கிடைக்கும். மனதில்  குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். கடன்படவேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும்.
. வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.
சனியின் சஞ்சாரமும் அவ்வளாக சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.
எல்லாவித கஷ்டங்களும் பெரிதாகப் படாத வண்ணம் குருவின் 7-மிட சஞ்சாரம் நற்பலன்களை வாரி வழங்கும்.

பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில், துர்கையம்மனை சிவப்பு மலர் கொண்டு அர்ச்சிக்கவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்து வழிபடவும். வியாழக் கியமைகளின் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை சாத்தி வழிபடவும்.
வாழ்க வளமுடன்!
########################

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)