விண்கலங்களில் மனித்ர்கள் மிதக்க பூஜ்ஜிய ஈர்ப்புதான் காரணமா?:
பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்காது. பூமியின் ஈர்ப்பு புலவீச்சு தொலைவு செல்லச் செல்ல குறைந்துகொண்டே போகும். ஆனால் முற்றிலும் பூஜ்ஜியம் ஆகாது. அதுபோல சூரியனின் ஈர்ப்பு புலவிசையும் தொலைவு செல்லச் செல்ல வீச்சு குறையுமே தவிர பூஜ்ஜியம் ஆகாது.
விண்வெளிக் குடில் போன்ற விண்கலங்களில் மனிதர்கள் மிதப்பதைப் பார்த்து அங்கே பூஜ்ஜிய ஈர்ப்புப் புலம் இருப்பதாக நாம் தவறாகக் கருதுகிறோம்.
அந்த விண்கலத்தைத் தாண்டி, பலமடங்கு தொலைவில் உள்ள நிலவின் மீது பூமியின் ஈர்ப்பு விசை பாய்வதால்தான் நிலவு பூமியைச் சுற்றுகிறது. எனவே நடுவில் உள்ள விண்கலத்தில் பூஜ்ஜிய ஈர்ப்புப் புலம் எனக் கருதுவது பிழை.
பூமியைச் சுற்றும் விண்கலம் பூமியை நோக்கி விழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் பூமியின் தரை வளைந்து கோள வடிவில் இருப்பதால், விண்கலம் பூமியைச் சுற்றி வருகிறது. இயற்பியலில் இது ’இயல் வீழ்வு’ அல்லது ‘தடையின்றி தானே வீழல்’ எனப்படும். விண்கலமும் அதில் உள்ளவர்களும் ஒரே முடுக்கு வேகத்தில் பூமியை நோக்கி வீழ்வதால், அதில் உள்ளவர்கள் மிதப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது.
*****************************
Dec 292021